வியாழன், 20 ஆகஸ்ட், 2009

உன்னதமான குடும்ப உறவுகள்

இந்தியாவில் குடும்ப உறவுகள் மிக உன்னதமானவை என்று சொல்லப்படுகின்றன. மேலைநாடுகளில் தனித்தனியாகத்தான் இருப்பார்கள். இந்தியா போன்ற கீழைநாடுகளில்தான் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள். இவர்களுடைய சிந்தனையே கூட்டம் கூட்டமாகத்தான் இருக்கும். அதாவது ஒரு மனிதன் தானாக சுதந்திரமாக சிந்திக்க முடியாது. அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தம்பி, மனைவி, பிள்ளைகள் என்று எல்லோருடைய சிந்தனையும் கலந்து(தன்னுடைய சிந்தனை எது என்றே சில சமயம் தெரியாமல் போய்விடும்)தான் சிந்திக்க முடியும். அவனுடைய நடவடிக்கைகள் கூட அவன் விரும்பியபடி இருக்காது. அதிலும் அம்மா அப்பா என்று ஒரு கூட்டமே குறுக்கிடும். மொத்தத்தில் சிந்தனையிலோ செயலிலோ அவனுக்கு எந்தவிதமான சுதந்திரமும் இருக்காது.ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், இதற்கு யார் என்ன சொல்வார்களோ என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். இது ஒரு வகையில் அராஜகமான சூழ்நிலைதான். பிறகென்ன, ஒரு மனிதன் சுயமாக சிந்திக்க முடியாது. சுயமாக இயங்க முடியாது என்றால் பிறகு அவன் எதற்கு இந்த பூமியில். ஒருவனுடைய நடவடிக்கைகளையும் சிந்தனைகளையும் மிரட்டி ஒடுக்கினாலும் பாசம் என்ற பெயரில் ஒடுக்கினாலும் ஒன்றுதானே.ஆனால் இந்த அராஜகத்தை விரும்பாவிட்டாலும் பெரும்பாலானவர்கள் இதை விட்டு வெளியே வருவதில்லை. காரணம் கூட்டத்தில் ஒருவராக இருப்பதில் ஒரு பாதுகாப்பு இருக்கிறது.தனியாக இருந்தால் அதில் பல்வேறு ஆபத்துக்கள் இருக்கின்றன. சொந்தமாக ஏதாவது செய்தால் அவனது செயல்களால் வரும் தீமைக்கும் நன்மைக்கும் அவனே பொறுப்பு என்று ஆகி விடுகிறது. இதனால் ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதில் இருந்து அவனே கையூன்றி தப்பித்து எழுந்து வர வேண்டியிருக்கிறது. அவனது தேவைகள் அனைத்தையும் அவனே சொந்தமாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.ஆனால் குடும்பத்தில் ஒருவராக கூட்டத்தில் ஒரு அங்கமாக இருந்தால் பிரச்சனை இல்லை. எல்லாவற்றையும் யாரோ பார்த்துக்கொள்வார்கள். அக்கடா என்று இருக்கலாம். இதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படுவதில்லை.மேலை நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வயதில் இருந்து அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு என்ற சூழல் நிலவுகிறது. அவர்களது பண்பாடே அப்படித்தான். அப்பாவாக இருந்தாலும் சரி. அம்மாவாக இருந்தாலும் சரி. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிள்ளைகளின் வாழ்க்கையில் அத்து மீறி மூக்கை நுழைக்க மாட்டார்கள். ஆனால் அங்கெல்லாம் குடும்பம், நட்பு, உறவு என்பது இல்லாததால் பெரும்பாலானவர்கள் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் உள்ளாகின்றனர். எனவே இந்தியா போன்ற நாடுகளில் உள்ள குடும்ப உறவுகள், சாதி உறவுகள், மத உறவுகள் பேணிப்பாதுகாக்க வேண்டியவை. மொத்தத்தில் கூட்டத்தி¢ல் ஒருவராக இருப்பது நல்லது. தன்னந்தனியாக சிங்கம் போல திரிந்து எங்காவது ஆபத்தில் மாட்டிக்கொள்வதை விட, ஆட்டு மந்தையில் ஒரு ஆடாக மேய்ந்து கொண்டிருப்பது சிறந்தது என்று இந்தியாவில் உள்ள சில பண்பாட்டு பாதுகாவலர்கள் கூறி வருகின்றனர்.உண்மையில் இங்குள்ள குடும்ப உறவுகளை தொடர்ந்து பேணிப்பாதுகாப்பதில் வரக்கூடிய மன உளைச்சல்கள், தன்னந்தனியாக சுற்றித்திரியும் போது ஏற்படும் மன உளைச்சல்களைக் காட்டிலும் அதிகம். தனியாக திரியும் போது ஒருவனுக்கு ஏற்படும் மன உளைச்சல் அவனால் மட்டுமே ஏற்படும். அதற்கு தீர்வையும் அவனிடமே தேடிக்கொள்ளலாம். ஆனால் கூட்டமாக திரியும் போது மன உளைச்சல்கள் பல திசைகளில் இருந்தும் வரும். தீர்வையும் அவன் பலர் மூலம்தான் தேட முடியும். மற்றொரு விஷயம். குடும்பம் என்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தனித்தனியாக திரியும் மேலை நாட்டுப் பண்பாட்டில் நல்லதோ கெட்டதோ முடிந்தவரையில் அவர்கள் அச்சு அசலாக உண்மையாக இருக்கிறார்கள். நம்மூரில் ஆகா உன்னதமான குடும்ப அமைப்பில் உறுப்பினர் என்று சொல்லிக்கொண்டு முடிந்தவரையில் நடிக்கிறார்கள்.

1 கருத்து:

  1. ஆட்டுக்கூட்டதிலிருந்து ஒரு ஆடு தனியாக செல்ல நினைக்காது. சென்றாலும் பிரட்சனைகளை கண்டு பயப்படும்........ ஆட்டுக்கூட்டதில் வசிக்கும் சிங்கம் தனியாக செல்வதர்க்கு பயப்படாது, வந்த துன்பம் எதுவாயினும் கூட்டத்தை நாடி செல்லாது..... தக்க சமயத்தில் சரியான முடிவை தயங்காமல், தெliவாக எடுப்பவனைத்தான் சிங்கம் என்றேன்....

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி

எனது படம்
மனம் விட்டு சில விஷயங்களை பேசிக்கொள்ளத்தான் வேறென்ன